களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் நாளை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்;ட சம்பவத்தை அடுத்து மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்தது.
அத்துடன், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 4 மாணவர்களுக்கு வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 11 ஆம் திகதி களனிப் பல்கலைக்கழகத்தின், விஞ்ஞானம், கணனித் தொழினுட்பம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய 3 பீடங்களும் திறக்கப்பட்டன.
ஏனைய 2 பீடங்களும் நாளை 18 ஆம் திகதி திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்திருந்த நிலையில், நாளை முதல் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்கள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.