கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் நேற்று பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள யுவதி உட்பட நால்வரும் 20 மற்றும் 25 வயதுடைய ராகம மற்றும் முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
களனி விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் படி, ராகம பொலிஸாரினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 5,200 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைத் துப்பாக்கியால் சுட்டு இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் காயப்படுத்தியமை, மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெலிசர நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.