உத்தரபிரதேச மாநிலம் சம்ஷாபாத் பகுதியில் நேற்று முன் தினம் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், அப்பகுதி மக்கள் இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இரவு உணவு விருந்தில் பல்வேறு உணவு வகைகள், ரசகுல்லா உள்பட இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன. அப்போது, ரசகுல்லா இனிப்பு தீர்ந்துவிட்டது. இது குறித்து திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில் இந்த சம்பவத்தில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேசம் எட்மட்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இனிப்பு வகைகள் தீர்ந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.