ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் 36 படகுகள் முற்றிலுமாக தீயில் கருகி சேதம் அடைந்தன. 9 படகுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான படகில் மது விருந்து நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அங்கிருந்த யூடியூபர்களுக்கு இடையே பண விஷயம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதன்காரணமாக போதையில் இருந்த சிலர் படகுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. படகு தீப்பிடித்து எரிவதை பார்த்த மீனவர்கள் அந்த படகை கடலுக்குள் தள்ளிவிட முயற்சி செய்தனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் மற்ற படகுகளுக்கு தீ வேகமாக பரவியது. படகுகளில் இருந்த சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததால் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆந்திர மீன்வளத்துறை மந்திரி சீதிரி அபல்ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80 சதவீதம் வரை இழப்பீடாக படகுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டு விடும். இது முதலமைச்சரின் முடிவு’ என்று தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.