கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ் குமார், இலட்சுமி நாராயண் கோவில் தலைவராக உள்ளார்.
இந்தநிலையில் சதீஷ் குமாரின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்கள் 14 ரவுண்டுகள் சுட்டனர். இதில் இந்த கோவில் நிர்வாகியின் மகன் வீடு சேதடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சர்ரேரில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில்தான் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலிஸார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சதீஷ் குமார் கூறும்போது, “எனது மகன் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது. போலிஸ் விசாரணையின் போது தாக்குதல் நடத்தியது யார் என்பது தெரிய வரும்” என்றார்.