இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
278 பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடி படகுடன் 06 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்டு இன்று (05) காலை குறித்த படகு மற்றும் சந்தேகநபர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.