தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவிற்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னணி பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த முயற்சிகளில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.