இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதற்காகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினர் இவ்வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் நாட்டிற்கு 2.9 பில்லியன் டொலர்கள் கடனை வழங்குவதற்கான முன்மொழிவிற்கு கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர்கள் கடன் நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதலாம் கட்ட மதிப்பீட்டிற்கு கடந்த மாதம் 12 ஆம் திகதி அனுமதி வழங்கிய நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை, அதன்மூலம் 2 ஆம் கட்டமாக 337 மில்லியன் டொலர்கள் நிதியை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இரண்டாம் கட்ட மதிப்பீட்டை இவ்வருடத்தின் முதல் அரையாண்டிற்குள் நிறைவுசெய்வதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், இந்த வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.