துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (09) உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் நேற்று (11) குற்றஞ்சாட்டினார்.
மக்கள் பெரும் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கடலில் விருந்து வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த இரண்டு சிறிய இழுவைப் படகுகளையும் ஒதுக்கியுள்ளதுடன், இவற்றில் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து உணவு மற்றும் குளிர்பானங்களையும் அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உல்லாசப் பயணத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு காப்புக் கப்பல்கள் எனவும் துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த பயணத்திற்காக துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவினால் தயாரிக்கப்பட்ட இந்த இன்பப் பயணத்திற்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை வழங்குமாறு திங்கட்கிழமை (08) துறைமுக அதிகார சபையின் தலைவரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.