நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும், எனவே அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து அந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
பெப்ரவரி மாதத்தின் பின்னர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும், அதனை சீர்குலைக்க சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளை இனங்கண்டு தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற போது, இந்த நாட்டில் அரசியல் செய்யும் திறமை எவருக்கும் இருக்கவில்லை. எந்த ஒரு அபிவிருத்திப் பணியையும் செய்ய யாருக்கும் பலம் இல்லை. மூன்று வருடங்களாக தடைப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிந்துள்ளது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.