இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் லட்சத்தீவு சென்றிருந்தார். லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவையும், பிரதமர் மோடியையும், இந்தியர்களையும் விமர்சித்து மாலத்தீவு மந்திரிகள் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலரும் ரத்து செய்தனர். சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மாலத்தீவு இந்திய சுற்றுலா பயணிகளின் இந்த நடவடிக்கையால் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, மாலத்தீவில் இந்திய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து விமானங்கள், கண்காணிப்பு பணிக்காக 88 வீரர்களை மாலத்தீவில் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது. இந்த வீரர்களை மார்ச் 15ம் தேதிக்குள் திருமப்பெறும்படி மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி மூசா சமீர் நேற்று சந்தித்தார்.
அணிசேரா நாடுகளின் 19வது உச்சிமாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கம்பாலா சென்றுள்ளார். அங்கு ஜெய்சங்கரை மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி மூசா சமீர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின், இரு நாடுகளுக்கு இடையேயன உறவு குறித்து வெளிப்படையாக பேசப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.