மாலத்தீவு புதிய அதிபராக முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மாலத்தீவில் இந்திய படை வீரர்கள் 88 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை, மாலத்தீவுக்கு டிரோனியர் ரக விமானத்தையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாலத்தீவில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவின் கபி அலிப் விலிங்இல்ஸ் என்ற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி இருந்துள்ளது. இதற்கான சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு கடந்த வியாழக்கிழமை வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுவனுக்கு உடனடியாக மேல்சிகிச்சை அளிக்க தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், சிறுவனை அழைத்து செல்ல இந்தியா வழங்கிய டிரோனியர் விமானத்தை பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா வழங்கிய விமானத்தை பயன்படுத்த அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், 16 மணிநேரத்திற்கு பின் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது அனுமதி அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சிறுவனை உடனடியாக மாலிக்கு கொண்டு வர முடியவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.