தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் வடகொரியா தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் தென்கொரியாவின் கடலுக்கடியில் ஹைல்-5-23 என்ற அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது.
இந்தநிலையில் வடகொரியாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா இடையே காணொலிக்காட்சி மூலம் சந்திப்பு நடைபெற்றது. இதில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை, சைபர் தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் உலகளாவிய அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதை இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். எனவே சைபர் கிரைம் விசாரணைகள், தகவல் பகிர்வுகளை விரிவுபடுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்றவற்றை ஒருங்கிணைக்க அவர்கள் ஒப்புக்கொண்டதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.