இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சில தினங்களாக இரு அணியினரும் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் எப்போதும் வலுவான சக்தியாக விளங்குகிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா, அதன் பிறகு உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்தது கிடையாது. கடந்த 11 ஆண்டுகளில் உள்ளூரில் தொடர்ச்சியாக 16 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வீறுநடை போடுகிறது. அந்த வெற்றி வேட்கையை தொடரும் உத்வேகத்துடன் ஆயத்தமாகியுள்ளனர். மூத்த வீரர் விராட் கோலி தனிப்பட்ட விஷயம் காரணமாக முதல் இரு டெஸ்டில் மட்டும் விளையாடமாட்டார். அவரது விலகல் சற்று பின்னடைவு தான் என்றாலும் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் மிரட்டுவார்கள்.
சுழற்பந்து வீச்சாளர்கள்
ஆடுகளம் முழுமையாக சுழலுக்கு உகந்த வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காணுகிறது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுடன் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். இவர்களின் சுழல் ஜாலமே அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாதனையின் விளிம்பில் உள்ள அஸ்வின் இன்னும் 10 விக்கெட் எடுத்தால் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.
இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டி என்பதால் அந்த வகையிலும் இந்தியாவுக்கு இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணியிலும் 3 சுழல்
1933-ம் ஆண்டில் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணி இங்கு இதுவரை 15 தொடர்களில் ஆடி 5-ல் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2021-ல் வந்த போது தொடரை 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
இந்த முறை பல்வேறு புதிய யுக்திகளை தீட்டியுள்ளது. இந்தியாவில் இருப்பது போன்ற சூழல் உள்ள அபுதாபியில் 10 நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். அத்துடன் இந்தியா போன்றே 3 சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்குகிறது. ரெஹான் அகமது, ஜாக் லீச், புதுமுக வீரர் டாம் ஹார்ட்லீ என்று மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்றும், தேவைப்பட்டால் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஜோ ரூட்டை முதல் ஓவரில் கூட பயன்படுத்துவோம் என்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியினர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ‘பாஸ்பால்’ பாணியில் ஆடுகிறார்கள். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் மந்தமாக இல்லாமல் ஒரு நாள் போட்டி போன்று அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் ஆடுகிறார்கள். ஒரே நாளில் சர்வ சாதாரணமாக 450 ரன்னுக்கு மேலும் குவித்துள்ளனர். கடந்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டிராவை நோக்கி நகர்ந்த 3 டெஸ்டிலும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கனியை பறித்தனர். பென் ஸ்டோக்ஸ், பென் டக்கெட், பேர்ஸ்டோ, கிராவ்லி தடாலடியாக மட்டையை சுழற்றக்கூடியவர்கள். இவர்களுடன் இந்தியாவுக்கு எதிராக 9 சதங்கள் அடித்துள்ள ஜோ ரூட்டும் உள்ளார். ஆனால் அந்த ‘பாஸ்பால்’ யுக்தி இந்திய சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எடுபடுமா? என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.
ஐதராபாத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 4-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல்:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் அல்லது துருவ் ஜூரெல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், பும்ரா, அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோ, பென் போக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, மார்க்வுட், ஜாக் லீச்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உள்நாட்டில் ஆதிக்கம் நீடிக்குமா? ரோகித் சர்மா பதில்
இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சொந்த மண்ணில் எங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று நினைக்கவில்லை. அது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. கடந்த கால சாதனைகள் முடிந்து போன விஷயம். அதை வைத்து இந்த தொடரில் நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்துவோம் என்று எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. தொடரை கைப்பற்ற நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.
அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வது தலைவலி தான். இருவரும் வெவ்வேறு வகையான திறமைசாலிகள். அவர்களில் யாருக்கு வாய்ப்பு என்பதை இப்போது சொல்லப் போவதில்லை.’ என்றார்.
சாதனை துளிகள்
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதுவரை 131 டெஸ்டுகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 50-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 50 போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இவ்விரு அணிகள் மோதிய டெஸ்டில் இருந்து சில சாதனை புள்ளி விவரங்கள் வருமாறு:-
அணி அதிகபட்சம்: இந்தியா 759/7 டிக்ளேர் (சென்னை, 2016), இங்கிலாந்து 710/7 டிக்ளேர் (பர்மிங்காம், 2011).
அணி குறைந்த பட்சம்: இந்தியா 42 ரன் (லண்டன் லார்ட்ஸ், 1974), இங்கிலாந்து 81 ரன் (ஆமதாபாத், 2021).
அதிக ரன் குவித்தவர்கள்: சச்சின் தெண்டுல்கர் (இந்தியா)- 2,535 ரன் (32 ஆட்டம்), ஜோ ரூட் (இங்கிலாந்து)- 2,526 ரன் (25)
தனிநபர் அதிகபட்சம்: கிரஹாம் கூச் (இங்கிலாந்து)- 333 ரன் (லண்டன், 1990), கருண் நாயர் (இந்தியா)-303* ரன் (சென்னை, 2016).
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்: ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)- 139 விக்கெட் (35), சந்திரசேகர் (இந்தியா)-95 விக்கெட் (23).