வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அங்கிருந்து 50 கைதிகள் நேற்று (24) புதன்கிழமை இரவு தப்பியோடியுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையினை பொலிசார் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுப் பகல் இரு கைதிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்த நிலையில் இரவு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்ட போது அங்கிருந்து பாதுகாப்பு வேலியை உடைத்து 50 பேர் வரை தப்பியோடியுள்ளனர்.
இவ்வாறு தப்பியோடியவர்கள் அந்த பகுதி காட்டில் தலைமறைவாகியுள்ளதையடுத்து அந்த பகுதியை பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து சுற்றிவளைத்து தேடும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு அடிக்கடி கைதிகளிடை யே மோதல் ஏற்படுவதும், கைதிகள் தப்பியோடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.