இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
இந்த போரின் ஒரு பகுதியாக, யூதர்களுக்கு எதிரான பகைமை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. யூத எதிர்ப்பு, விமர்சனங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகளும் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. இந்த விவகாரத்தில் யூதர்களுக்கு எதிரான வேற்றுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் 1 லட்சம் பேர் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கலந்து கொண்டார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் இந்திய கொடிகளை ஏந்தியபடியும், இஸ்ரேல் நாட்டின் கொடிகளை சுமந்தபடியும் பேரணியில் சென்றனர். இந்த சவாலான தருணத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக துணை நிற்போம் என அவர்கள் தெரிவித்தனர்.