இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் சௌமியபூமி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (09) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.