யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்துகொண்டு , கட்டண அனுமதி பெற்று இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து மேடை வரையில் சென்று இடையூறு ஏற்ப்டுத்தியுள்ளனர்.
அத்துடன் , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி குழப்பங்களில் ஈடுபட்டனர்.
இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு , பொலிஸார் விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள் அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.
குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.