ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த முதலாவது போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகின்றது.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் மெக் லானிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷபாலி வர்மா 1 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஆலிஸ் கேப்ஸி மெக் லானிங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் லானிங் 31 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் களம் இறங்கினார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலிஸ் கேப்ஸி அரைசதம் அடித்த நிலையில் 75 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து மரிசான் கேப் களம் இறங்கினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
டெல்லி தரப்பில் ஆலிஸ் கேப்சி 75 ரன், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன் எடுத்தனர். மும்பை தரப்பில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் , அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.