கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு இடம்பெற்ற விபத்தில், தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான தந்தை மற்றும் 8 வயதான மகன் எனத் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலியானவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன், சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற குறித்த லொறியின் சக்கரம் ஒன்று திடீரென வெடித்ததில், லொறி வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.