மாசுபடுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி குளத்திலிருந்து குடிநீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி குளத்திலிருந்து பழைய முறையைப் பயன்படுத்தி நீர் சுத்திகரிக்கப்பட்டு சுமார் 7000 இணைப்புகள் மூலம் மக்களிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், குளத்தில் மனிதக் கழிவுகள், மலசலகூடக் கழிவுகள், வாகனக் கழிவு ஒயில்கள், நகரக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் என பலதும் கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படுவதால் நீர் மாசுபட்டுள்ளது.
எனினும், தற்பொழுது மிக பெரிய திட்டம் ஒன்றின் ஊடாக நவீன சுத்திகரிப்பு முறை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அடுத்த வருடம் முதல் பகுதியில் அதன் மூலம் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இரணைமடுக் குளத்தில் இருந்து நீரை நேரடியாக பெறுவது தொடர்பிலும் ஆலோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் எழும் என பொறியியலாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் விஜயத்தின் போது தான் பேசுவதாகவும், அதற்கான மாற்று மும்மொழிவுகளை தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.