தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலை பகிஸ்கரிப்பது தான் தமிழ் மக்களுக்கு உள்ள ஒரேயொரு தெரிவு என்றும் அதனையே தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்களத் தரப்பிற்கு இனிமேலும் தொடர்ச்சியாக வாக்களித்து நாங்கள் ஏமாறக் கூடாது என்கின்ற ஒரு தெளிவான செய்தியை இந்த தேர்தலில் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.