சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்ன என்பவரின் மூடநம்பிக்கை கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது கண்டறியப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் படி, இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் சில பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன என்ற நபர் சுமார் பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் 28ஆம் திகதி ருவன் பிரசன்ன ஒரு வகை விஷத்தை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டார், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் அதே முறையில் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.