நாட்டிலுள்ள 7,603,923 மின் பாவனையாளர்களில் மின்கட்டணம் செலுத்தாத 1,064,400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டண அதிகரிப்பு, மின் விநியோகத் துண்டிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 7,603,923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மின்கட்டணம் செலுத்தாத 10,64 400 மின் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்துக் கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.