பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தையில் திட்டி, பெண் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை தெவிநுவர மணிக்கூண்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தனது வாகனத்தின் பாதையை இடையூறு செய்ததாக தெரிவித்து குறித்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
பின்னர் குறித்த அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலின் படி, குறித்த பெண் பயணித்த சொகுசு ஜீப்பை கந்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அதன்போது, குறித்த சந்தேக நபர் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேக நபரான பெண்ணை கந்தர பொலிசார் கைது செய்ததுடன், குறித்த ஜீப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.