இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், சிங்கள மக்களுக்கும் இது கரிநாள் என்பது பொருத்தமானதே என அவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
இலங்கைத் தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்பை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
இப்போது, சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும். இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் கோரிக்கை விடுத்துள்ளது.